வேலூர் சிப்பாய் புரட்சி
வேலூர் சிப்பாய் புரட்சி – வேலூர் என்றவுடன் அனைவர் மனத்திலும் முதலில் நிற்பது அகழியை சூழ்ந்த வேலூர் கோட்டையின் நிழற்படம். அதனை தொடர்ந்து சிஎம்சி மருத்துவமனை வேலூர் பல்கலைக்கழகம் , தங்கக்கோவில் என பல சிறப்பசங்கள் நம் நினைவிற்கு வருவதுண்டு.
இந்த கோட்டைக்கு பெரிய வரலாறு உண்டு. நாட்டில் உள்ள சில தரைக்கோட்டைகளில் ஒன்று. அதனை சூழும் என்றும் வற்றாத அகழி.
பல ஆண்டுகளுக்கு முன் இந்த கோட்டை ஒரு அரண்மனை கோட்டையாக இருந்ததை பலரும் அறிவர். அந்த கோட்டையின் கீழ் இருக்கும் சுரங்கப்பாதை விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவில் சிம்மக்குளத்திற்கு செல்லும் என்றும் நாம் கேள்வி பட்டதுண்டு.
இந்த கோட்டையில் ஜலம் கொண்ட ஈஸ்வரராக ஜலகண்டீஸ்வரர் (சிவன்) சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டு இன்று ஜலகண்டீஸ்வரர் ஆலயமாக, கோட்டை கோவில் என்று தற்போது அழைக்கபடுவதுண்டு.
ஆனால் வெகு சிலரே அறிவர் வரலாற்றை!
சுதந்திரத்துக்கு வித்திட்டது வேலூர் மண்ணில் கோட்டையில் நடந்த வரலாற்று புரட்சியை?
இந்திய சுதந்திர போராட்டத்தின் முதல் புரட்சி வேலூரில் நடந்தது. அதுதான் வேலூர் சிப்பாய் புரட்சியாகும். 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி இந்திய சுதந்திரத்துக்கு அடித்தளமிட்ட நாளாகும்.
குள்ள நரியாக 100 ஆண்டுகள் வாழ்வதை விட புலியாக ஒரே ஒரு நாள் வாழ சம்மதம் என்றவர் திப்பு சுல்தான் பீரங்கிகளாலும், துப்பாக்கிகளாலும் ஆங்கிலேயர்களை போரில் எதிர்கொண்ட திப்பு பலமுறை அவர்களை தோற்கடித்தார். எனினும் ஆங்கிலேயர்களால் சீரங்கப்பட்டிணத்தில் நயவஞ்சகமாக கொல்லப்பட்டார். திப்புசுல்தான் கொல்லப்பட்டப் பிறகு அவரது குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் காவலில் வைக்கப்பட்டனர். திப்புவிற்கு 12 மகன்களும் 6 மகள்களும் இருந்தனர். இவர்களுடன் திப்புவின் பணியாளர்களும் சேர்த்து 300 பேர் கைது செய்யப்பட்டனர் இவர்களை 370 வெள்ளையர்களும் 1,500 இந்திய சிப்பாய்களும் காவல் காத்தனர். இவர்களில் இந்து, முஸ்லீம்கள் இருந்தனர். அதிலும் ஏராளமானோர் தமிழர்களே ஆவர்.
ஆங்கிலேயர்கள் இந்திய சிப்பாய்களை நடத்திய முறை வெப்பத்தை உருவாக்கியது. சிப்பாய்கள் காதில் கடுக்கண் அணியக்கூடாது. நெற்றியில் குங்குமமோ, விபூதியோ பூசக் கூடாது. தாடி வளர்க்கக் கூடாது தலைப்பாகையாக புதுவகை தொப்பி அணியவேண்டும் என்று வெள்ளையர் கெடுபிடி செய்தனர். புதிதாக தரப்பட்ட துப்பாக்கி தோட்டாக்களில் மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருந்ததாக செய்தி உலவியது. இந்து முஸ்லீம் இரு தரப்பு சிப்பாய்களும் ஆவேசம் அடைந்தனர். வாலாஜாபாத், பெங்களூரு, கொல்லம், பெல்லாரி, ஐதராபாத், பாளையங்கோட்டை, வேலூர் முதலிய ராணுவத்தளங்களில் உள்ள வீரர்கள் கோபத்தால் கொதித் தெழுந்தனர்.
இந்தக் காலத்தில் ராணுவ முகாம்களில் பக்கீர்கள் என்ற பெயரில் புரட்சியாளர்கள் இருந்தனர். அவர்கள் மத சாமியார் வேடத்தில் பொம்மலாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். ஆங்கிலேயர் இறுதியில் தோற்பது போல் காட்சிகள் இருந்தன. விடுதலை உணர்வின் திரிக்கு இதுவும் தீ மூட்டியது. வேலூர் சிப்பாய்கள் கிளர்ச்சியில் முந்தியமைக்கு காரணம் திப்புசுல்தான் குடும்பம் அங்கு இருந்ததே ஆகும். சீரங்கப்பட்டிணத்திலிருந்து தேச பக்தர்கள் ஏராளமானோர் வேலூரில் ஊடுருவி இருந்தனர். திப்புவின் மூத்த மகன் பத்தே ஹைதர் தலைமையில் கோட்டையில் ரகசிய கூட்டங்கள் நடந்தன. கர்னல் மேரியர் என்பவன் வேலூர் கோட்டையில் தலைவனாகவும் திப்புவின் குடும்பத்தின் காவலனாகவும் இருந்தான். வேலூர் கோட்டையின் களம் யாராலும் யூகிக்க முடியாத அளவு இருந்தது. புரட்சிக்கு முதல்நாள் இரவு 300 இந்திய சிப்பாய்கள் வேலூர் கோட்டை வந்து சேர்ந்தனர்.
வேலூர் சிப்பாய் புரட்சி 1806:
ஜூலை 10-ஆம் தேதி அதிகாலை 2 மணி; வேலூரின் விழிகளை தூக்கம் கனத்து போர்த்தியிருந்தது. இந்தநிலையில் திடீரென கேட்ட வேட்டு சத்தத்தில் வேலூர் விழித்தது. கோடை இரவில் காற்றோட்டமாய் தெருக்களில், திண்ணைகளில் உறங்கியோரும் கோட்டையை நோக்கி ஓடினர். புரட்சி வீரர்கள் ஆயுதக்கிடங்கிலிருந்து தளவாடங்களுடன் வெளியே வந்தனர்.
கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் ஆயுத கிட்டங்கியாக மாறியது. 6 பவுண்ட் எடை கொண்ட 2 பீரங்கிகளும் இந்திய சிப்பாய்களிடம் இருந்தன. எதுவும் புரியா கலக்கத்துடன் வெள்்ளை அதிகாரிகள் அரண்மனைகளிலிருந்து வெளியில் வந்தனர். புரட்சியாளருடன் இந்திய சிப்பாய்கள் மொத்தமாக 500 பேராக அணி வகுத்திருந்தனர். ஆங்கிலேயர்கள் தங்கியிருந்த விடுதிகள், மாளிகைகள் சுற்றிவளைக்கப்பட்டன.
வெளியே வந்த ஆங்கில அதிகாரிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். திப்புவின் குடும்பத்தை காவல் காத்த கர்னல் மேரியர், உதவி கர்னல்கள் கோம்ஸ், ஈவிங், மிட்செல் உள்ளிட்ட 8 ஆங்கில அதிகாரிகள் தங்குமிடங்கள் குறி வைக்கப்பட்டன. அவர்கள் தேடித்தேடி கொல்லப்பட்டனர். கோட்டையின் தலைவன் பேங்கோர்ட்டும் தாக்குதலில் கீழே விழுந்தான். நீ தானே புதிய தொப்பி போட வைத்தாய் என சிப்பாய்கள் அவனை விசேஷமாக கவனித்தனர். அவனை காறி உமிழ்ந்து துப்பாக்கியின் மரப்பிடியால் அடித்தே கொன்றனர். கோட்டை இந்திய சிப்பாய்களின் வசம் வந்தது. கோட்டையின் வாசலில் இந்திய வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.
பொன்னிற காலை கதிரொளியில் சிலர் திப்புவின் குடும்பம் தங்கிய பகுதியில் நுழைந்தனர். அவர்களை தலைமை ஏற்க கோரினர். இளவரசர் மொய்சுதின் திப்புவின் புலி சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை புரட்சியாளர்களிடம் தந்தார். கோஷம் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இனிப்புகள், உணவு, பானம் வழங்கப்பட்டது. இப்போது திப்புவின் மூத்த மகன் பத்தே ஹைதர் வெளியில் வந்தார். ஒற்றுமையாகவும் கட்டுக்கோப்பாகவும் இருந்து கோட்டையை காப்பாற்றுங்கள் என பேசினார். காலை 7.30 மணிக்கு திடீரென நிலைமை மாறியது. கோட்டையில் தங்க நாணயங்கள் மட்டும் பாதுகாக்கப்படும் ஒர் அறை இருந்தது. சிலர் அதனை உடைத்து நாணயங்களை கைப்பற்றினர். கொள்ளையடிக்கும் ஒரு கூட்டம் கிளம்பியது திமுதிமுவென அந்த கூட்டம் தள்ளுமுள்ளுவில் இறங்கியது சம்பவங்கள் வேறுவிதமாய் திரும்பின. புரட்சியாளர்கள் திகைத்து சிதறினர். அவர்களின் மனவலிமை குன்றியது.
அப்போது தான் அருகில் ஆற்காட்டில் முகாமிட்டிருந்த கர்னல் கில்லெஸ்பி செய்தி அறிந்து வேலூர் நோக்கி விரைந்து கொண்டிருந்தார். அவரது குதிரைப்படையில் கேப்டன் யெங், லெப்டினெண்ட் உட்ஹவுஸ் உள்ளிட்டோர் இருந்தனர் மிரட்சியுடன் அவர்கள் வந்தாலும் வேலூர் கோட்டையில் அவர்கள் கண்ட காட்சி பீதியை போக்கியது. பிரதான வாசலிலோ பின்புறமோ காவலுக்கு யாரும் இல்லை. கில்லெஸ்பி படை எதிர்ப்பின்றி உள்ளே விரைந்தது. இதே நேரம் தங்க நாணயங்களை கொள்ளையடித்த கூட்டம் தெற்கு கோட்டையின் மதில் சுவரில் சிறு கதவு வழியே முண்டியடித்து தப்பிக்க எத்தனித்தது. நெரிசலில் பலர் அகழியில் விழுந்து இறந்தனர். குழப்பத்தை வெள்ளையர் லகுவாக கையாண்டனர். இந்திய சிப்பாய்களை கைது செய்து வரிசையாக சுட்டுக்கொன்றனர். கோட்டையின் தலைமை பொறுப்பை தற்காலிகமாக கில்லெஸ்பி ஏற்றான்.
புலி பாய்ச்சலில் ஆரவாரமாய் தொடங்கிய விடுதலைப்போராட்டம் வயலில் எலி போட்ட மோட்டையாய் குறுகியது. 8 மணி நேரத்தில் வேலூர் கோட்டையை ஆங்கிலேயர் மீட்டனர். திப்புவின் குடும்பம் கொல்கத்தா சிறைக்கு மாற்றப்பட்டது எனினும் வேலூர் புரட்சி ஆங்கிலேயருக்கு அதிர்ச்சி தந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் வட இந்தியாவை தென்னிந்தியா குறிப்பாக தமிழகம் முந்தியது என்பதற்கு வேலூர் மேலும் ஒரு களச்சான்று ஆகும்.
இதன் பின்னரே ஜாலியன்வாலாபாக் படுகொலை 1850ஆம் ஆண்டில் நடந்தது
ஆனால் ஆங்கிலேயரை எதிர்த்து அந்த படையில் இருந்த இந்திய வீரர்களே போர்க்கொடி எழுப்பியது வேலூரில்தான்.
*ஆங்கிலேயர்களால் சிப்பாய் கலகம் என்று அழைக்கப்பட்டது.
சுதந்திரம் அடைந்த பின்னர், அடுத்து வந்த மத்திய அரசு இதை சிப்பாய் புரட்சி என்று பெயர் மாற்றியது.* இதையடுத்து, 1999-ம் ஆண்டில் வேலூர் மக்கான் சந்திப்பில் நினைவு தூணை தமிழக அரசு ஏற்படுத்தியது. இங்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது
சிப்பாய் புரட்சியின் நினைவாக தபால் தலை வெளியிடப்பட்டது.
Content Credit – Gathered from various online sources
Image Credit – Vellore is my Heaven
Thank u for sharing this information, now I know the reason to y we celebrate this day as vellore day💥
You’re most welcome. Subscribe to our blog and follow us on Facebook and twitter pages to know more latest details about Vellore 🙂