வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு சில மாத காலங்கள் ஆகிய நிலையில், அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு, சிறந்த முறையில் செயலாற்றி வரும் பெருநகரங்களுக்கு ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற திட்டத்தின் கீழ் நிதி வழங்க திட்டமிட்டது.
வேலூர் மாநகராட்சி:
இதற்கான பெருநகர பட்டியலில் தமிழகத்தில் வேலூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டது. இந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் மாநகராட்சியில் சில நலத்திட்டங்களை செயல்படுத்த ஒரு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தனர்.
திட்ட அறிக்கையை ஆய்வு செய்து, முதற்கட்டமாக வேலூர் மாநகராட்சியில் நவீன வசதி கொண்ட சாலைகள் மற்றும் நவீன பூங்காக்கள் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான இடங்களையும் தேர்வு செய்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் திட்ட மதிப்பு சுமார் 150 கோடி.
அண்மையில், வேலூர் காட்பாடி ரயில் சந்திப்பு நிலையத்தை தெற்கு ரயில் நிலைய மேலாளர் பார்வையிட்டார். அதன் பின்பு தெற்கு ரயில் நிலைய திட்ட அறிக்கையில், வேலூர் காட்பாடி ரயில் நிலையத்திற்கு பல்வேறு நவீன வசதிகள் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதன் மொத்த திட்ட மதிப்பு சுமார் 20 கோடி.
நகரும் படிக்கட்டுகள், நடைமேடை விரிவாக்கம், பயணிகள் ஒய்வு அறை விரிவாக்கம் என பல்வேறு வசதிகள் இந்த திட்டத்தின் கீழ் உள்ளடங்கும்.
வேலூர் விமான சேவை:
அது மட்டுமின்றி, வேலூரில் உள்ளூர் விமான சேவைகள் விரைவில் தொடக்க உள்ளதாக மத்திய உள்ளூர் விமான சேவை மையம் (UDAI ) தெரிவித்துள்ளது. வேலூர் அப்துல்லாபுரத்தில் ஹெலிகாப்டர் ஓடுபாதையை விரிவுபடுத்தி உள்ளூர் பயணிகள் விமான சேவைகள் வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்டமாக வேலூர் – சென்னை மற்றும் வேலூர் – பெங்களூரு ஆகிய தடங்களில் விமானங்களை இயக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மூன்று திட்டங்களும் விரைவில் நிறைவேறி, வேலூர் புதுப்பொலிவு பெற வேலூர் மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.